சகரியா 14:14-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.

15. அந்தப்பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.

16. பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

17. அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

18. மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும்வரும்.

19. இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.

20. அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

21. அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.

சகரியா 14