சகரியா 11:7-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,

8. ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

9. இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

10. அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்.

11. அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.

12. உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

13. கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

14. நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.

15. கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.

16. இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.

17. மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

சகரியா 11