ஏசாயா 66:11-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

11. நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்.

12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

13. ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

14. நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

15. இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜூவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.

16. கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

17. தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18. நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

19. நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.

20. இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரி வண்டிகளின்மேலும், கோவேறு கழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவாருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

21. அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

22. நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

23. அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

24. அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.

ஏசாயா 66