1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.
5. வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது:
6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும் ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.
8. நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
9. பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.