ஏசாயா 40:9-26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.

10. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

11. மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

12. தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

13. கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

14. தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார்?

15. இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலேபடியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.

16. லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.

17. சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.

18. இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

19. கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.

20. அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.

21. நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?

22. அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

23. அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.

24. அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும்.

25. இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

26. உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

ஏசாயா 40