1. ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
2. சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
3. அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும்.
4. வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
5. வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.
6. போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.