எரேமியா 51:1-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,

2. தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள்.

3. வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.

4. குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.

5. அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும் யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.

6. நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

7. பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.

8. பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

9. பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாய மண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

10. கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.

11. அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.

12. பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.

13. திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.

14. மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.

15. அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.

16. அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.

17. மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

18. அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.

எரேமியா 51