1. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
2. கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.
3. சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
4. அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும்போக்குமாயிருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
5. பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
6. அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
7. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.
8. கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
9. கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.