7. ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
8. அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.
9. தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
10. ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
11. உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது.
13. உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களுமில்லை.
14. உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும்வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிறவண்ணமாகவும் நான் உன்னை தண்டித்தேன்.
15. உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
16. ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
17. அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
19. அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.
20. அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.