எண்ணாகமம் 15:13-28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

14. உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

15. சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

16. உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

17. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

18. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

19. தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

20. உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப்படைக்கவேண்டும்.

21. இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப்படைக்கக்கடவீர்கள்.

22. கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

23. கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

24. அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

25. அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

26. அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

27. ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒருவயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.

28. அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

எண்ணாகமம் 15