எண்ணாகமம் 13:10-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

10. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.

11. யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.

12. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.

13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.

14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.

15. காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.

16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

17. அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

18. தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

19. அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

20. நிலம் எப்படிப்பட்டது அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.

21. அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

22. தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

23. பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

24. இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

25. அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.

எண்ணாகமம் 13