5. சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
6. என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
7. உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்.
8. யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
9. யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
10. சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
11. அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
12. அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.
13. செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.
14. இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
15. அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
16. தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
17. தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
18. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
19. காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.