ஆதியாகமம் 49:23-33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

23. வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.

24. ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

25. உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

26. உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

27. பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.

28. இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

29. பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;

30. அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.

31. அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.

32. அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.

33. யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக் கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

ஆதியாகமம் 49