ஆதியாகமம் 44:1-15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

2. இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

3. அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.

4. அவர்கள் பட்டணத்தை விட்டுப்புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

5. அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.

6. அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.

7. அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.

8. எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?

9. உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

10. அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

11. அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.

12. மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.

13. அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.

14. யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.

15. யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

ஆதியாகமம் 44