ஆதியாகமம் 41:42-56 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

42. பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,

43. தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்;

44. பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.

45. மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

46. யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.

47. பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.

48. அவ்வேழு வருஷங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

49. இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

50. பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள்.

51. யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

52. நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.

53. எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின்,

54. யோசேப்பு சொல்லியபடி ஏழுவருஷ பஞ்சம் தொடங்கினது; சகலதேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.

55. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான்.

56. தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக்கொடிதாயிற்று.

ஆதியாகமம் 41