12. பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
13. அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
14. கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.
15. அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.
16. சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.
17. தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
18. அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
19. அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
20. அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
21. பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
22. தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
23. அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
25. ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.