ஆதியாகமம் 27:32-46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

32. அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.

33. அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

34. ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

35. அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்.

36. அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம் போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.

37. ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.

38. ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

39. அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

40. உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.

41. யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.

42. மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.

43. ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,

44. உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.

45. உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.

46. பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.

ஆதியாகமம் 27