19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
22. அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
23. ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
24. அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.
25. ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
26. அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக்கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
27. அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.
28. ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.