ஆதியாகமம் 19:1-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

3. அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

4. அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

5. லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள்.

6. அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:

7. சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.

8. இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

9. அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.

ஆதியாகமம் 19