19. அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
20. அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
21. அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
22. மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
23. அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.
24. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
25. தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.
26. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
27. பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?
28. நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
29. இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
30. நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
31. மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
32. நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.