21. அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
22. அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
23. எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
24. உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
25. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
26. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.