அப்போஸ்தலர் 13:9-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:

10. எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?

11. இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.

12. அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

13. பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

14. அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.

15. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

16. அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.

17. இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,

18. நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,

19. கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,

20. பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

21. அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

22. பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்.

23. அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.

24. இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.

25. யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.

அப்போஸ்தலர் 13