9. இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.
10. யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.
11. பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.
12. இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
13. யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
14. தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.
15. அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
16. அவனுக்கு உதவியாக கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.