18. இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
19. இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
20. அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.
21. பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடேபோனான்.
22. தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு, தண்டிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.
23. யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.
24. அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
25. நேரின் குமாரனாகிய அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.
26. யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
27. அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.
28. தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
29. அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும், ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை என்றான்.