22. கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.
23. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
24. அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
25. ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
26. தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்.
27. புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
28. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.
29. கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
30. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
31. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
32. கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
33. தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
34. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.