4. இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது.
5. ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
6. ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்.
7. அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
8. மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
9. இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.
10. அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
11. ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
12. அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.