2 இராஜாக்கள் 23:21-35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

21. பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.

22. இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.

23. ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது.

24. ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா அஞ்சனக்காரரையும், குறிசொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும் நரகலான விக்கிரகங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.

25. கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.

26. ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்:

27. நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.

28. யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

29. அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான்.

30. மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.

31. யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அமுத்தாள்.

32. அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

33. அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,

34. யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.

35. அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.

2 இராஜாக்கள் 23