12. அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
13. அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
14. அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.
15. அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
16. உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.
17. அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
18. அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
19. அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைத்தருளினார்.
20. சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
21. எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.