1 இராஜாக்கள் 7:24-36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

24. அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது.

25. அது பன்னிரண்டு ரிஷபங்களின் மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.

26. அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

27. பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமாயிருந்தது.

28. அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.

29. சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.

30. ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நாலு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது.

31. திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது.

32. அந்த நாலுஉருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாயிருந்தது.

33. உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாயிருந்தது.

34. ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.

35. ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது.

36. அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத்தக்கதாய்ச் செய்தான்.

1 இராஜாக்கள் 7