13. இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
14. அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
15. ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம் தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.
16. தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதிஸ்தானமாகக் கட்டினான்.
17. அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.
18. ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.
19. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதிஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.
20. சந்நிதிஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
21. ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதிஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
22. இப்படி ஆலயம் முழுவதும் கட்டித்தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதிஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
23. சந்நிதிஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுமாயிருந்தது.
24. கேருபீனுக்கு இருக்கிற ஒருசெட்டை ஐந்துமுழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனை தொடங்கி மற்றச் செட்டையின் கடைசி முனை மட்டும் பத்துமுழமாயிருந்தது.
25. மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.
26. ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
27. அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
28. அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
29. ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
30. உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.
31. சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.
32. ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.