1 இராஜாக்கள் 13:17-34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

17. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.

18. அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.

19. அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.

20. அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,

21. அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,

22. அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

23. அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான்.

24. அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.

25. அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.

26. அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி,

27. தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம்வைத்துக் கொடுத்தார்கள்.

28. அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை.

29. அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து,

30. அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள்.

31. அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள்.

32. அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.

33. இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.

34. யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.

1 இராஜாக்கள் 13