10. அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான்.
11. கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.
12. அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
13. அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
14. தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
15. அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
16. அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
17. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
18. அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
19. அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.
20. அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,
21. அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,
22. அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
23. அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான்.