வெளிப்படுத்தின விசேஷம் 22:1-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

3. இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

4. அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

5. அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

8. யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

9. அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

10. பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 22