27. அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
28. அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
29. அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
30. அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
31. அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை.
32. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
33. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
34. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
35. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
37. நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
38. நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
39. நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
40. முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
41. வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.
42. நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
43. ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
44. அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.