16. இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17. பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18. பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின் மேல் சுற்றிலும் பூசி,
19. தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்,
20. அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21. அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.