லூக்கா 7:25-41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.

26. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

27. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.

28. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

29. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.

30. பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

31. பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?

32. சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

33. எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.

34. மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.

35. ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

36. பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.

37. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

40. இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.

41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.

லூக்கா 7