11. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
12. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
14. போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18. அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
19. அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.