12. ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13. நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
14. ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
15. சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
16. ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
17. கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
18. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.
19. கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
20. வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
21. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.