1. அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2. வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
3. நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக.
4. அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,
5. அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
6. அந்த இராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
7. அந்த இராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.