5. பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும்.
6. அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
7. ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
8. துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
9. அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
10. கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
11. ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
12. ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
13. அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
14. ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
15. அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
16. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
17. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.
18. பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
19. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
20. இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?