15. இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
16. அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
17. உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
18. ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
19. அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
20. துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
21. பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.
22. இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
23. அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.