1. அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
2. ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
3. பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
4. நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
5. உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
6. நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
7. மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
8. நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
9. நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
10. உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
11. தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ?
12. உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?