1. யோபு பிரதியுத்தரமாக:
2. ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3. உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
4. என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
5. ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
6. கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
7. இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8. அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9. கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
10. சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
11. வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
12. முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13. அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.