யோசுவா 9:13-27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள்.

14. அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.

15. யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.

16. அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்று நாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

17. இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.

18. சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

19. அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக்கூடாது.

20. கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.

21. பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

22. பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?

23. இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.

24. அவர்கள் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.

25. இப்பொதும், இதோ, உமது கையிலிருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.

26. அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

27. இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.

யோசுவா 9