5. அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.
6. அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
7. ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.
8. யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது.
9. எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின் சென்றது.