1. பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
2. அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
3. நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
4. ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.
5. நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்த பின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.
6. நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள்.