11. ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.
12. அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி,
13. கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,
14. அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான்.
15. அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து:
16. நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?
17. பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.
18. நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.
19. உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.
20. சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
21. அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக:
22. தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்ளுவார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
23. ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.
24. நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?
25. ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
26. சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
27. கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
28. நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.