8. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
9. உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.
10. மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
11. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
12. அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று.
13. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
14. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.
15. காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
16. அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேளாமற்போனீர்.