யாத்திராகமம் 28:12-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய்.

13. பொன்னினால் வளையங்களைப்பண்ணி,

14. சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.

15. நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.

16. அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.

17. அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,

18. இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,

19. மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,

20. நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.

21. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.

22. மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,

23. அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,

24. பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,

25. அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.

26. நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,

27. வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,

28. மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.

29. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.

30. நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.

யாத்திராகமம் 28