16. நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
17. அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
18. சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
19. மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20. கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
22. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
23. அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
24. கோபம்மூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
25. உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.